search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர அரசு"

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AndhraGovt #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.

    இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    தற்போது இந்த போராட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு தொகை செலவானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

    ஆந்திர அரசு செலவில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை டெல்லிக்கு அழைத்துசென்றார். இதற்காக 2 ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டது. ஆந்திர அரசே மத்திய ரெயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரெயில்களை முன்பதிவு செய்து ரெயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளித்தது.

    முக்கிய வி.ஐ.பிக்களுக்கு சொகுசு அறைகள், பொது மக்களுக்கு தனியாக அறைகள் என மொத்தம் 1100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதற்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

    உணவு, இதர செலவு என மொத்தம் ரூ.10 கோடி செலவாகி உள்ளது. இதற்கான தொகையை 6-ந்தேதியே ஒதுக்கீடு செய்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 மணி நேர போராட்டத்துக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திலேயே இந்தச் செலவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசி இருந்தார். அதில், ‘இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது.

    இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர, ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். #AndhraGovt  #ChandrababuNaidu

    ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #Reservoir #PalarRiver
    வேலூர்:

    கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.

    தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு பாலாற்று பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், தற்போது 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே புதிதாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அம்மாநில நீர்வள ஆதாரத்துறையின் சித்தூர், பலமநேர் கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் மூலம் ஆந்திர அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இதை வேலூர் மேம்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வேலூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதமும் உறுதிப்படுத்துகிறது.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியிருப்பதாக வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்தார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த 2000-2005ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி 40 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

    இதையடுத்து, அந்த தண்ணீரை பல தடுப்பணைகள் கட்டித் தேக்குவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால், பாலாற்றுப் படுகை பகுதியில் வேலூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மேல்பாலாற்றுப் பகுதிகள் ஏற்கெனவே கருப்பு வட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.

    பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Reservoir #PalarRiver




    பெங்களூரு நகரில் ஒரே நாளில் 33 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து சாதனை செய்யப்பட்டு உள்ளது. இது விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறது. #PlasticBan
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பெங்களூரு மாநகராட்சி சார்பில் ‘பிளாக் ரன்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு மாநகராட்சியுடன் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் கைகோர்த்தன.

    இதில், மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டதோடு, அவர்கள் குழு குழுவாக பிரிந்து நகரின் 50 இடங்களில் சாலையோரம், பூங்காக்களில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். காலை 9 மணியில் இருந்து இரவு 8.15 மணி வரை அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர்.



    தண்ணீர் பாட்டில்கள் உள்பட 33 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை அவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதன் மூலம், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பில் முந்தைய கின்னஸ் சாதனையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், ‘பெங்களூருவில் 12 மணி நேரத்துக்குள் 33 ஆயிரத்து 495 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இது கின்னஸ் சாதனைக்கு தகுதியானது. இதற்கு முன்பு 12 மணி நேரத்தில் 28.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்ததே சாதனையாக உள்ளது’ என்றார்.

    இந்த சாதனை, விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று தெரிகிறது. #PlasticBan
    திருப்பதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple #PlasticBan

    திருமலை:

    திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பரிணாமத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி நகரின் நிலத்தடி நீர் அளவு குறைந்தது மட்டுமல்லாமல், சுற்றுப்புற மற்றும் சுகாதாரச் சீர்கேடும் அதிகரித்துள்ளது.

    மேலும், திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பட்டியலில் உள்ளதால், அதை உலகத் தரம் வாய்ந்தாக மாற்ற ஆந்திர அரசு முயன்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி நாளான நேற்று முதல் திருப்பதி நகரில், பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய நகராட்சி முடிவு செய்து அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

    51 மைக்ரானிற்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மோகோலால் செய்யபடும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.


    அதற்கு, பதில் துணி மற்றும் சணலைப் பயன்படுத்தி செய்யப்படும் பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றபடி, பால் பாக்கெட்டுகள், ஒரு லிட்டருக்கு மேற்பட்ட குடிநீர் பாட்டில்கள், மருத்துவமனைகளில் மருந்துகளை அளிக்க நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள், அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த திருப்பதி நகராட்சி அனுமதி அளித்துள்ளது.

    இதைதொடர்ந்து திருப்பதியில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொது இடத்தில் கொண்டு வந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரம் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. #TirupatiTemple #PlasticBan

    வாணியம்பாடி அருகே பெத்தவங்கா பகுதியில் பாலாற்றில் ஆந்திர அரசு மேலும் ஒரு புதிய தடுப்பணையை கட்டி வருவதை அறிந்த தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #APReservoir
    வாணியம்பாடி:

    கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழகத்தில் பாய்ந்தோடி வங்க கடலில் கலக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 22 தடுப்பணை கட்டியுள்ளது.

    வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோவில் அருகே ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு கட்டியிருந்த தடுப்பணையினால், தமிழகத்தின் பாலாற்று பகுதியில் தண்ணீர் வராமல் போனது. இந்நிலையில், மீண்டும் தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரித்து,12 அடியாக உயர்த்தி கட்டியது.

    இதன் காரணமாக எப்போதுமே பாலாற்றில் தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான புல்லூர் அருகே, கங்குந்தி பெத்தவங்கா என்னும் பெரும்பள்ளம் பகுதி உள்ளது.

    இப்பகுதியையொட்டி, தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் வழியில் பாலாற்றின் கிளை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதியதாக தடுப்பணை கட்டி வருகிறது. ரூ.1 கோடி மதிப்பில் சுமார் 10 அடி உயரம், 10 அடி அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இரும்பு, ஜல்லி, சிமெண்ட் கலவை கொண்டு திடமான தடுப்பணை கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.

    தொடர்ந்து, மேலும் சில தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்துக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிரந்தரமாக தண்ணீர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை அறிந்த தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.  #APReservoir



    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகர் பதவியில் இருந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கணவர் பரகல பிரபாகர் இன்று ராஜினாமா செய்தார். #APgovermentadviser #resigns
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவரது பதவி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திர மாநில அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதால் சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து, அம்மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜகவை முழு மூச்சாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், ஆந்திர அரசின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்த பரகல பிரபாகரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ சிறப்பு அந்தஸ்து கோரி வரும் மாநில அரசின் போராட்டத்துக்கு தாம் தடையாக இருக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பும் கேள்விகள் வேதனை அளிக்கின்றன. உங்களின் விருப்பத்துக்கு மாறாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    4 ஆண்டுகள் பதவி வகித்த பரகல பிரபாகரின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. #APgovermentadviser #resignsa
    ×